துணிக்கடை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக, தனது மனைவி மற்றும் மகனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, துணிக்கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிகாலை வேளையில் துணிக்கடை அதிபரான பிரபாகர், தனது மனைவி ஜோதியின் கழுத்தை நெரித்தபோது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, அவரது மகன் சந்தோஷ் ஓடிவந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பிரபாகர், அவர்கள் இருவரையும் படுக்கையிலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து யாரும் வெளியே வராததால், மாமியாரை எழுப்புவதற்காக மருமகள் சென்று பார்த்தபோது, ஜோதியும், கணவர் சந்தோஷும் படுக்கையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்த நிலையில், பிரபாகர் தனது துணிக்கடையிலேயே தூக்கில் பிணமாகத் தொங்குவது கண்டறியப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தின்போது வீட்டின் மற்றொரு அறையில் மருமகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பிரபாகர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், துணிக்கடை தொழில் முற்றிலும் முடங்கியதாலும், அதனால் ஏற்பட்ட கடன் சுமை அதிகரித்ததாலும் இந்த தீவிர முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த தொடர் தொல்லைகளால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதன் காரணமாகவே தனது மனைவி மற்றும் மகனைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதத்தில் பிரபாகர் உருக்கமாக எழுதியுள்ளார். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.