தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண்ணை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை மறைக்க, அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை அம்பலமாகி உள்ளது.

இதுதொடர்பாக உயிரிழந்த பெண்ணின் அண்ணன் மற்றும் தாயாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் அபிசெல்வி. இவர் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் அபிசெல்வியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்தபோது, அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அபிசெல்வியின் அண்ணனான சிவஞானம் மற்றும் அவரது தாயார் எஸ்தர் பாலின் ஆகியோர், இந்த காதலைக் கைவிடுமாறு பலமுறை அபிசெல்வியை வற்புறுத்தியும், எச்சரித்தும் வந்ததாகத் தெரிகிறது.

குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அபிசெல்வி தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் சிவஞானம், தங்கை என்றும் பாராமல் அபிசெல்வியை கொடூரமான முறையில் ஆணவக்கொலை செய்துள்ளார். கொலைக்குப் பின்னர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகவும், ஊர் பொதுமக்களை நம்ப வைப்பதற்காகவும் சிவஞானமும் அவரது தாயாரும் சேர்ந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அபிசெல்வி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி உடலை மறைக்க முயன்றுள்ளனர்.

அபிசெல்வியின் மரணத்தில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அபிசெல்வி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும், மாற்றுச் சமூக இளைஞரைக் காதலித்த ஒரே காரணத்திற்காக அவரது அண்ணன் சிவஞானமே அவரைக் கொலை செய்ததும் உறுதியானது. மேலும், இந்த ஆணவக்கொலைக்கு சிவஞானத்தின் தாய் எஸ்தர் பாலின் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இளம்பெண்ணை ஆணவக்கொலை செய்த அண்ணன் சிவஞானம் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் ஆகிய இருவரையும் கயத்தாறு காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.