அதிமுகவிலிருந்து விலகி ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விஜயபாஸ்கருக்கு, மண்டல பொறுப்பாளர் பதவி வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவில் இணைந்த பிறகு அவருக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் தகவல் பரவி வருகிறது.
அவர் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்ப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தவெக தலைமை தற்போதுள்ள மாவட்ட நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதனால், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவிக்கு பதிலாக வேறு பெரிய பொறுப்பை வழங்கத் தலைமை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
இதன் காரணமாக, சுமார் 4 முதல் 5 மாவட்டங்களை ஒன்றிணைத்து, அதற்கான மண்டல பொறுப்பாளர் பதவியை விஜயபாஸ்கருக்கு வழங்கத் தலைமை முன்வந்திருப்பதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மண்டல அளவில் கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தத் தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை கட்சித் தலைமையால் வெளியிடப்படவில்லை. விஜயபாஸ்கருக்கு மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கப்படுவது தொடர்பான தகவல்கள் மட்டுமே தற்போது பனையூர் வட்டாரத்திலும், அரசியல் தளத்திலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.
