பொன்னேரி அருகே கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இது ஒரு திட்டமிட்ட ‘ஆணவக்கொலை’ என்று அருணாவின் காதலரும், சக கிராம நிர்வாக அலுவலருமான சிவபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த தாங்கள் இருவரும் காதலித்ததால், அருணாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அவரை அடித்துத் துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டதாக அந்தப் புகாரில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவபாரதி அளித்துள்ள புகாரில், அருணா இறப்பதற்கு முன்னதாக சமூக வலைத்தளம் வாயிலாகத் தனக்கு அனுப்பிய செய்திகளை ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், தனது குடும்பத்தினர் தன்னைத் தாக்கி, கட்டாயப்படுத்தி விஷத்தை வாயில் ஊற்றியதாக அருணா தெரிவித்திருந்ததாகக் கூறியுள்ளார்.

அருணாவின் அண்ணன் காவலராகப் பணியாற்றி வருவதாகவும், அவர் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து சாதி வெறியால் இந்தச் செயலைச் செய்துள்ளதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மறுபுறம், இந்தச் சாடல்களை அருணாவின் குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அருணா தானாகவே விஷம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும், அவரைத் தாங்கள் காப்பாற்றவே முயற்சி செய்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது திருப்பாலைவனம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் சிவபாரதியின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரிடமும் முழுமையான விசாரணை நடத்திய பிறகே அருணாவின் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.