தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக 10 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே நேரடி நான்கு முனைப் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன. ஏற்கனவே திமுக சார்பில் கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிமுகவும் தனது குழுவை அறிவித்துள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்: அதன்படி நத்தம் விஸ்வநாதன், பொன்னையன்
டி.ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகை செல்வன்
இந்த முறை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அதிரடியான பல அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை. மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி (Laptop), மிதிவண்டி வழங்குதல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள். தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் ஆண்டுதோறும் தடையின்றி பொங்கல் பரிசுத் தொகை வழங்குதல் போன்றவைகள் ஆகும்.
தேர்தல் அறிக்கை என்பது வெறும் வாக்குறுதிப் பட்டியலாக இல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளைப் பிரதிபலிக்கும் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதற்காக இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறிய உள்ளனர்.
மேலும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான ‘எம்.ஜி.ஆர். மாளிகையில்’ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று இக்குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மண்டல வாரியாகக் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவது மற்றும் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
