“தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களைக் கூட்டணியில் வரவேற்போம்” என்றும், “பொங்கல் பண்டிகைக்குள் முக்கிய அரசியல் தலைவர்கள் கட்சியில் இணைய உள்ளனர்” என்றும் தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தவெக அலுவலகத்தில், கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் பேசியதாவது: “வரலாற்றுப் பின்னணி கொண்ட தேசியத் தலைவரான வேலுநாச்சியாரை நமது கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக ஏற்றுப் போற்றுகிறோம். நமது கழகம் தற்போது மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உலக நாடுகளே வியக்கும் வகையில் ஒரு சிறந்த தலைவராக தவெக தலைவர் விஜய் உருவெடுப்பார். மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.”

கூட்டணி மற்றும் ஆட்சிப் பகிர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நமது தலைவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களைக் கூட்டணியில் மனமுவந்து வரவேற்போம். விரைவில் யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியும். தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது குறித்த தகவல்கள் ஏதுமில்லை. விருப்ப மனு தொடர்பான முடிவுகளைத் தலைவரே அறிவிப்பார்” என்றார்.

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தவெக-வை விமர்சிப்பது குறித்துக் கேட்டபோது, “அரசியலில் காய்ந்த மரத்தில்தான் கல்லடி படும் என்பது போல, நமது கட்சியின் வளர்ச்சியைப் பார்த்துப் பயந்து அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால், தவெக நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வரும்” என்று பதிலளித்தார்.

இதனிடையே, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் நேற்று முறைப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக-வில் ஏற்பட்ட பிளவின் போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த இவர், நேற்று கட்சித் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்துத் தன்னை இணைத்துக் கொண்டார். முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து தவெக-வை நோக்கி வருவது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.