இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு இடையே ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் (2008) ஏற்பட்ட ‘ஸ்லாப்கேட்’ (Slapgate) எனப்படும் அறைவாங்கல் விவகாரம், தற்போது மீண்டும் ஒரு புதிய மோதலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்திய போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 43 வயதான ஸ்ரீசாந்த், தனது முன்னாள் சக வீரரான 45 வயது ஹர்பஜன் சிங்கிற்கு பாக்ஸிங் ரிங்கிற்குள் வந்து நேருக்கு நேர் சண்டையிட சவால் விடுத்துள்ளார். மேலும், ஹர்பஜன் சிங்கின் தைரியத்தையும் அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் ஹர்பஜன் சிங் நடித்த ஒரு விளம்பரம், கடந்த 2008-ஆம் ஆண்டு தங்களுக்குள் நடந்த மோதலை சூசகமாகக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளதே ஸ்ரீசாந்தின் இந்த கோபத்திற்குக் காரணமாகும். அந்த விளம்பரத்தின் மூலம் ஹர்பஜன் சிங் சுமார் ₹80 லட்சம் முதல் ₹1 கோடி வரை கணிசமான தொகையைச் சம்பாதித்துள்ளதாகவும், தனது கடந்த கால அவமானத்தைப் பயன்படுத்தி அவர் லாபம் ஈட்டியுள்ளதாகவும் ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
Sreesanth’s open challenge to Harbhajan for a ring fight 💀
If you’ve got the guts, Bhajji, step into the ring. Enough with the ads.. pic.twitter.com/VQV5f7E1La
— Kohlistic🔥 (@Kohlistic18) June 18, 2026
அந்த நபருடன் எனக்கு எந்தவொரு உறவும் இல்லை என்று கூறியுள்ள ஸ்ரீசாந்த், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமிலும் ஹர்பஜன் சிங்கை பிளாக் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தமக்குப் பெற்றோர் மன்னிக்கக் கற்றுக் கொடுத்துள்ளதால் அவரை மன்னித்தாலும், அந்த அவமானத்தை எப்போதுமே மறக்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக, ஏப்ரல் 25, 2008 அன்று மொஹாலியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, ஹர்பஜன் சிங் மைதானத்திலேயே ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்ததும், அதனால் ஸ்ரீசாந்த் அழுதுகொண்டே நின்றதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக ஹர்பஜனுக்கு 11 போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டுகளில் இருவரும் இணைந்து சில விளம்பரங்களில் நடித்தும், ஹர்பஜன் பலமுறை பொதுவெளியில் மன்னிப்புக் கோரியும் சமரசம் ஏற்பட்டது போலத் தோன்றினாலும், தற்போதைய ஸ்ரீசாந்தின் கருத்துக்கள் அந்த சமரசம் வெறும் தற்காலிகமானது என்பதையும், கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட பகை இன்னும் ஓயவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
