கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்ப காலத்தில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது தலைக்கவசம் (Helmet) அணியும் வழக்கம் இருக்கவில்லை. இதனால் பல விபத்துகளும் காயங்களும் ஏற்பட்டு வந்த நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் முதன்முதலாக ஹெல்மெட் பயன்படுத்தப்பட்டதன் சுவாரசியமான பின்னணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் அசாத்திய பேட்ஸ்மேன் டென்னிஸ் அமிஸ் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

உலக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதமடித்த வீரரான டென்னிஸ் அமிஸ், தனது காலத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தாலும், மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசப்படும் பந்துகள் தனது முகம் அல்லது தலையில் தாக்கிவிடுமோ என்ற பயம் அவருக்கு எப்போதும் இருந்துள்ளது. இந்த அச்சமே அவரை கிரிக்கெட் விளையாடும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற புதிய சிந்தனைக்கு இட்டுச் சென்றுள்ளது.

பேக்கர் வேர்ல்ட் சீரிஸ் (Packer World Series) தொடரின் போது, மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்துவீசக்கூடிய 16 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள டென்னிஸ் அமிஸ், ஒருமுறை தாம் ஒரு கடையில் சக வீரரான டோனி கிரெய்க் உடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும், அதனுடன் இருந்த ஹெல்மெட்டையும் பார்த்த போதுதான், இந்த மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டை ஏன் கிரிக்கெட்டிற்குப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது.

பின்னர் இந்த யோசனைக்கு பேக்கர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முதலாக டென்னிஸ் அமிஸ் ஹெல்மெட் அணிந்து விளையாடினார். இங்கிலாந்து அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்களுடன் 3,612 ரன்களும் (அதிகபட்சம் 263*), 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்களுடன் 859 ரன்களும் குவித்துள்ள டென்னிஸ் அமிஸின் இந்த ஒரு யோசனை, இன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.