பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வரவிருக்கும் 2026/27 சீசனுக்கான தனது மத்திய ஒப்பந்த முறையில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக, வீரர்கள் விளையாடும் போட்டி வடிவங்களின் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) அடிப்படையில் தனித்தனி பிரிவுகளாக இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த புதிய முறையின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கும் ‘டிராக் ஏ’ பிரிவு வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் மற்றும் போட்டி கட்டணம் ஆகிய இரண்டிலும் மிகப்பெரிய அளவில் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சிவப்பு பந்து கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோர் அடங்கிய குழுவினால் இந்த புதிய வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது.
பிசிபி-யின் நம்பகமான வட்டாரங்களின்படி, புதிய மாற்றத்தின் கீழ் ‘டிராக் ஏ’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கான கட்டணம் சுமார் 15 லட்சம் பாகிஸ்தான் ரூபாயாக (PKR) உயர்த்தப்படவுள்ளது. இதற்கு முந்தைய ஒப்பந்தத்தில் இது வெறும் 8 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களது மாதாந்திர ஊதியம் வரி பிடித்தத்திற்கு முன்பாக 40 லட்சம் ரூபாயாக இருக்கும். ‘டிராக் ஏ’ மற்றும் ‘டிராக் பி’ ஆகிய இரண்டிலும் இடம்பெறும் வீரர்களின் மாத ஊதியம் 48 முதல் 50 லட்சம் ரூபாய் வரை உயரும். இதுமட்டுமின்றி, ஐசிசி (ICC) கோப்பையை வென்றால் போட்டி கட்டணத்தில் 500 சதவீதமும், ஆசிய கோப்பையை வென்றால் 300 சதவீதமும் கூடுதல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடும் ‘டிராக் பி’ வீரர்களுக்கு மாத ஊதியமாக 18 லட்சம் ரூபாயும், டி20 மற்றும் பிரான்சிஸ் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடும் ‘டிராக் சி’ வீரர்களுக்கு 12 முதல் 15 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். அதே வேளையில், இந்த முறை ஒப்பந்தம் பெறும் வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது பிரிவுகளை பொதுவெளியில் பகிரங்கமாக அறிவிக்கப்போவதில்லை என்ற பிசிபி-யின் முடிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
