இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய ‘ஏ’ அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை ‘ஏ’ அணி வீரர்களுக்கு இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் தள்ளுமுள்ளு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்று, போதிய வெளிச்சமின்மையால் அந்தகார இருட்டில் விளையாடப்பட்டு முடிவில் இந்தியா தோல்வியடைந்தது. இத்தோல்விக்கு பிறகு இலங்கை வீரர்கள் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வம்புக்கு இழுத்ததால் ஆத்திரமடைந்த அவர், இலங்கை வீரர் ஒருவரை நோக்கிச் சென்று ஆக்ரோஷமாக தள்ளிவிட்டார்.
இதனால் ‘பேபி பாஸ்’ என்று அழைக்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து தேவஜித் சைகியா பேசுகையில், இந்த முத்தரப்பு தொடரானது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் இதில் பிசிசிஐ அல்லது ஐசிசி (ICC) தலையிட முடியாது என்றும், போட்டி நடுவர் மற்றும் நடுவர்கள் மட்டுமே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் விளக்கியுள்ளார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி இறுதிப்போட்டியில் விளையாடுவது தற்போது உறுதியாகியுள்ளது.
மற்றொருபுறம், பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் இந்திய ‘ஏ’ அணி புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்த இமாலய வெற்றியின் மூலம் இந்திய ‘ஏ’ அணி நான்கு புள்ளிகள் மற்றும் 0.597 என்ற சிறந்த நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை ‘ஏ’ அணியும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியும் மோதவுள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால், நடப்பு சாம்பியனான இலங்கைக்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த கடைசி லீக் ஆட்டத்தின் முடிவு எப்படி அமைந்தாலும், இந்திய ‘ஏ’ அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நீடித்து இறுதிப்போட்டியில் விளையாடுவது முற்றிலும் உறுதியாகியுள்ளது.
