சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின்  தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்தியாவின் இந்த முடிவை இஸ்லாமாபாத் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும், பாகிஸ்தானுக்கான நதி நீர் பங்கீட்டை நிறுத்த முயன்றால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

தங்களின் நியாயமான நதி நீர் உரிமைகளில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தண்ணீரின் ஓட்டத்தைத் தடுக்க முயலும் இந்தியாவின் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக பாகிஸ்தான் உறுதியாகப் போராடும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு பகல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால் பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், அந்நாடு இதனைப் போருக்கான நடவடிக்கையாகக் கருதி இத்தகைய ஆக்ரோஷமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கும் எண்ணம் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்புச் சபையின் (UNSC) 62-வது கூட்டத்தொடரில் உரையாற்றிய, ஐநாவிற்கான இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் அனுபமா சிங், இந்த விவகாரத்தில் புது தில்லியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தனது அரசு கொள்கையாகவே பயங்கரவாதத்தை ஊக்குவித்துக்கொண்டு, மறுபுறம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையிலான ஒத்துழைப்பைக் கோர முடியாது என்று அவர் சாடினார். மேலும், 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை இன்றைய யதார்த்த நிலைக்கும் பொறுப்புக்கூறலுக்கும் அப்பாற்பட்ட ஒரு நிரந்தர உரிமமாகக் கருத முடியாது என்றும், இந்த விஷயத்தில் இந்தியா தனது முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் ஐநா சபையில் திட்டவட்டமாக முழங்கினார்.