ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையரின் ஆண்டு அறிக்கை மீதான விவாதத்தின் போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தனது ‘மறுப்புரிமை’ (Right of Reply) மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஐநாவிற்கான இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் அனுபமா சிங், பயங்கரவாதத்தை வளர்த்து, பயிற்சி அளித்து, அதைத் தனது அரசு கொள்கையாகவே பயன்படுத்தி வரும் பாகிஸ்தானை ஒரு “பிராங்கென்ஸ்டைன் நாடு” (Frankenstein State) என்று சாடினார்.
தான் வளர்த்த அரக்கன் (தீவிரவாதம்) தன்னைத் திரும்பக் கடிக்கும் போது பாகிஸ்தான் அதிர்ச்சியடைவது ஒரு விசித்திரமான முரண்பாடு என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும் என்றும், அங்குள்ள ஒரே தீர்க்கப்படாத விவகாரம் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அந்தப் பகுதிகளை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைப்பது மட்டுமே என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#WATCH | First Secretary at the Permanent Mission of India to the United Nations, Anupama Singh says, “Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. The only unresolved issue is Pakistan’s illegal occupation of Indian territories and… pic.twitter.com/Kjr0mq1STZ
— ANI (@ANI) June 18, 2026
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ரவலகோட் பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்களில் 4 போலீஸார் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதையும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததையும் சுட்டிக்காட்டிய அனுபமா சிங், பாகிஸ்தானின் வன்முறை முகம் குறித்து உலகரங்கில் தோலுரித்துக் காட்டினார். பல தசாப்தங்களாக ராணுவ நில அபகரிப்பு, மக்கள் தொகை மாற்றம் மற்றும் அடிப்படை சுதந்திர மறுப்பு ஆகியவற்றால், தற்போது ரொட்டி, மின்சாரம், உரிமைகள் மற்றும் கண்ணியத்தைக் கேட்கும் மக்கள் மீது கூட பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு மற்றும் கொடூர அடக்குமுறையை ஏவிவிடுவதாகக் குற்றம் சாட்டினார்.
அத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று பகல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்துப் பேசிய அவர், பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, நல்லெண்ணத்தின் அடிப்படையிலான நதி நீர் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது என்றும், 1960-ஆம் ஆண்டு உலக வங்கியால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் தற்போதைய யதார்த்த நிலைக்கு ஒவ்வாத, காலாவதியான ஒன்று என்பதால் அதனை ஒரு நிரந்தர உரிமமாகக் கருத முடியாது என்றும் ஐநா சபையில் அதிரடியாக முழங்கினார்.
