ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2-வது கூட்டத்தொடரில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு  எழுப்பிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா தனது மறுப்புரிமை மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஐநாவிற்கான இந்திய தூதரகத்தின் முதல் செயலாளர் அனுபமா சிங் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும் என்றும், இதில் விவாதத்திற்கு இடமில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், பயங்கரவாதிகளுக்குத் தஞ்சம் அளிப்பது, பயிற்சி கொடுப்பது மற்றும் அவர்களைப் பயன்படுத்துவதை ஒரு அரசு கொள்கையாகக் கொண்டு அதற்குப் பெருமை பட்டுக்கொள்வதைச் சுட்டிக்காட்டிய அனுபமா சிங், இத்தகைய சூழலில் பாகிஸ்தான் தன்னைத் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொள்வது ஒரு பெரிய முரண்பாடு என்று சாடினார். பாகிஸ்தானின் இந்த பொய்ப்பிரச்சாரம் அதன் உள்நாட்டுத் தோல்விகளையும், பயங்கரவாத ஆதரவையும் மூடிமறைக்கவே என்றும், இதற்கு ஓஐசி அமைப்பை அது தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக புது தில்லி எடுத்துள்ள முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்துக்கொண்டு, மறுபுறம் நல்விருப்பம் மற்றும் நட்புறவின் அடிப்படையிலான நதி நீர் ஒத்துழைப்பைக் கோர முடியாது என்று குறிப்பிட்ட அவர், 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தம் தற்போது மிகவும் பழமையான ஒன்றாக மாறிவிட்டதால், இன்றைய யதார்த்த நிலை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்ட ஒரு நிரந்தர உரிமமாக அதனைப் பாகிஸ்தான் கருத முடியாது என்றார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரின் ராலவ்கோட் பகுதியில் அண்மைக் காலமாக நடந்து வரும் தீவிரப் போராட்டங்கள், அங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரமான அடக்குமுறைகள் ஆகியவற்றிலிருந்து உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பவே ஐநா சபையில் பாகிஸ்தான் இத்தகைய நாடகங்களை அரங்கேற்றி வருவதாகவும், ஆனால் அவற்றின் காலம் முடிந்துவிட்டதாகவும் இந்தியத் தூதர் அனுபமா சிங் அதிரடியாக முழங்கினார்.