உத்தரப் பிரதேச மாநிலம் லோதி மொஹல்லாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் மோனா சங்க்வார், கடந்த ஜூன் 16 அன்று மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். ஆக்ராவை சேர்ந்த இவருக்கும், சச்சின் சங்க்வார் என்பவருக்கும் கடந்த மார்ச் 12, 2026 அன்று பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. கணவர் வேலையில்லாமல் இருந்ததால், மாமியார் ஹன்ஸ்முகி மற்றும் மாமனார் பலராம் சங்க்வார் உள்ளிட்டோர் கூடுதல் வரதட்சணை கேட்டு மோனாவைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மோனாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டதாக அவரது தாய் ராதா தேவி மற்றும் சகோதரர் சிவம் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவத்தன்று மோனாவை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற மாமியார் வீட்டார், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதும் உடலை அங்கேயே விட்டுவிட்டுத் தலைமறைவாகினர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என மருத்துவர்  தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து  போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோனாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்குகளின் கீழ் மொத்தம் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாமனார் பலராம் சங்க்வார் என்பவரை போலீஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மோனாவின் கணவர் மற்றும் மாமியார் ஹன்ஸ்முகி சங்க்வாரைத் தேடி வருகின்றனர்.

இதில் முக்கிய திருப்பமாக, தேடப்படும் மாமியார் ஹன்ஸ்முகி, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் ஆவார். சிஓ சிட்டி ராம்கோபால் சர்மா தலைமையிலான போலீஸார், தலைமறைவான மற்ற குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருவதோடு, கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.