ஒடிசாவின் சௌத்வார் சிறைச்சாலையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த விஐபி முறைகேடுகள் தற்போது அம்பலமாகியுள்ளன. பிரபல கேங்க்ஸ்டர் தல்சமந்த் கூட்டாளியான லிட்டுவா பெஹரா என்பவரது தார் வாகனம் சிறை வளாகத்திற்குள் நுழைந்ததும், அங்கு அவர் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி அனுசுயா ஜேனா நடத்திய அதிரடி சோதனையில், சிறைக்குள் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை செய்து தரும் மாபெரும் நெட்வொர்க் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லிட்டுவா பெஹராவின் பாக்கெட்டில் இருந்து கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, விசாரணையின் போது அவர் உயர் அதிகாரியையே மிரட்ட முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனையின் மூலம் சிறைக்குள் சட்டவிரோதமாக ஒரு ‘VIP ஹோட்டல்’ செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறை விதிகளுக்குப் புறம்பாக, சந்தோஷ் என்ற கைதியை சமையல்காரராகக் கொண்டு தினமும் சுமார் 50 கைதிகளுக்கு அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு வந்துள்ளன.

இந்த சிறை ஹோட்டலில் ஒரு பிளேட் மட்டன் 500 ரூபாய்க்கும், சிக்கன் மற்றும் மீன் உணவுகள் 300 ரூபாய்க்கும், பன்னீர் மற்றும் காளான் உணவுகள் 250 ரூபாய்க்கும் விற்கப்பட்டு, பாலித்தீன் கவர்களில் அடைக்கப்பட்டு கைதிகளின் அறைகளுக்கே விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறைத்துறை உயர் அதிகாரிகளின் உடந்தையின்றி இத்தகைய சொகுசு வசதிகள் மற்றும் வாகன அனுமதி சாத்தியமில்லை என்பதால், இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள அதிகாரிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.