பீகார் மாநிலத்தில் இரயில் இன்ஜினில் இருந்து நபர் ஒருவர் டீசலைத் திருடுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரயில் தண்டவாளத்தின் அருகே நிற்கும் நபர் ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் டீசல் இன்ஜினில் இருந்து ஒரு குழாய் வழியாக எரிபொருளைப் பிடித்து, சாக்குப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனில் நிரப்புகிறார்.

“>

இதனால் எரிபொருள் நிறைந்ததும் அவர் அந்தப் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து அசாதாரணமாக நடந்து செல்கிறார். இக்காட்சியைப் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், “இதுதான் பீகார், இங்கு இரயில் இன்ஜினில் இருந்தே டீசல் திருடப்படுகிறது” என்று கிண்டலாகவும், அதிர்ச்சியுடனும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, இந்திய இரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கடுமையான விவாதங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன. இரயில்வே இன்ஜினில் இருந்து இவ்வளவு எளிதாக ஒருவரால் எப்படி எரிபொருளைத் திருட முடிகிறது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும், இந்த வீடியோ உண்மையில் பீகாரில் தான் எடுக்கப்பட்டதா அல்லது வழக்கம் போல் பழைய வீடியோ ஒன்று தவறான தகவலுடன் பரப்பப்படுகிறதா என்ற அதிகாரப்பூர்வ உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தச் சம்பவம் இரயில்வே நிர்வாகத்தின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.