தமிழகத்தில் அடுத்தாண்டு (ஏப்ரல்) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் முக்கியக் கட்டமாக, பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியை (Mobile App) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

குழுவின் உறுப்பினர்கள் விபரம்:

  • டி.கே.எஸ். இளங்கோவன்

  • எம்.எம். அப்துல்லா

  • எழிலன் நாகநாதன்

  • கார்த்திகேய சிவசேனாபதி

  • கான்ஸ்டண்டைன் ரவீந்திரன்

  • தமிழரசி ரவிக்குமார்

  • ஜி. சந்தானம் (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்)

  • சுரேஷ் சம்பந்தம்

தொழில்நுட்பம் மூலம் மக்கள் கருத்து

வெறும் வாக்குறுதிகளாக மட்டுமின்றி, மக்களின் உண்மையான தேவைகளை உள்ளடக்கிய அறிக்கையைத் தயார் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமாக இந்தப் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் தங்கள் பகுதி சார்ந்த தேவைகளை இந்தச் செயலி வாயிலாக நேரடியாகப் பதிவு செய்யலாம். அவ்வாறு பெறப்படும் கருத்துகளை கனிமொழி தலைமையிலான குழு ஆய்வு செய்து, அதில் சாத்தியமான அம்சங்களைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கும்.

மேலும் தேர்தல் பணிகளில் மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே திமுக களமிறங்கியுள்ள நிலையில், நேரடியாக மக்களிடமே கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் இந்த முயற்சி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.