பொன்னேரி அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) விஷம் குடித்து உயிரிழந்த சம்பவத்தில், அவர் ‘ஆணவக் கொலை’ செய்யப்பட்டதாக அவரது காதலன் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (27), கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், பாக்கம் கிராம விஏஓ-வான பழனியைச் சேர்ந்த சிவபாரதி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அருணாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அருணா விஷம் குடித்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். குடும்பத் தகராறால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அருணாவின் காதலன் சிவபாரதி போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அருணா தற்கொலை செய்யவில்லை; மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த என்னைக் காதலித்ததால் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்களே கட்டாயப்படுத்தி வாயில் விஷம் ஊற்றிக் கொலை செய்துள்ளனர். இறப்பதற்கு முன்பு அருணா சமூக வலைதளம் வாயிலாகத் தனக்கு நேர்ந்த கொடுமைகளை என்னிடம் தெரிவித்தார். ஜாதி வெறியால் அவரது குடும்பத்தினர் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். இவ்வாறு அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அருணாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். “அருணா வெளியே சென்று வரும்போதே விஷம் குடித்துவிட்டு வந்ததாகவும், சிவபாரதியின் புகாரில் உண்மையில்லை” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, புகார் அளித்த சிவபாரதியின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற கோணத்தில் திருப்பாலைவனம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
