கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விசாரணையில், முதல் நாளில் 9 மணி நேரமும், இரண்டாம் நாளில் 7 மணி நேரமும் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது. இதில் த.வெ.க. நிர்வாகிகள் மட்டுமின்றி, கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று 3-வது நாளாக புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ. அதிகாரி சுனில்குமார் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். கூட்ட ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
