உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் அருகே லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்து ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பானிபட்டில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து, திர்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைக் கடந்தபோது நள்ளிரவில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

மேலும் டயர் வெடித்தவுடன் உராய்வு காரணமாக பேருந்தில் தீப்பிடிக்கத் தொடங்கியதை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர், துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக இறங்குமாறு எச்சரித்துள்ளனர். பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதும் ஒரு நெருப்புக் கோளமாக மாறியது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தினர், இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வினோத் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் தங்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓட்டுநரின் சமயோசித புத்தியால் ஒரு மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.