பெங்களூருவில் மேகாஸ்ரீ என்ற இளம்பெண் தனது கணவர் மஞ்சுநாத் மீது பரபரப்பான பாலியல் மற்றும் வரதட்சணை கொடுமைப் புகாரை அளித்துள்ளார். திருமணமான முதல் நாளிலிருந்தே மஞ்சுநாத் தமக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், உடன்பட மறுத்தபோது உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேகாஸ்ரீயின் பெற்றோர் வீட்டிலேயே மூன்று மாதங்கள் தங்கியிருந்த மஞ்சுநாத், அங்குள்ள பெண்கள் மற்றும் மேகாஸ்ரீயின் பெற்றோர் முன்னிலையில் அரைகுறை ஆடையுடன் சுற்றித் திரிந்து அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மேகாஸ்ரீயின் புகைப்படங்களைத் தவறாகச் சித்தரித்து வெளியிட்டதுடன், அவரது பெற்றோர் புகைப்படங்களையும் பதிவிட்டு மஞ்சுநாத் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்த பின், வழக்கைத் திரும்பப் பெற மஞ்சுநாத் ஐந்து லட்சம் ரூபாய் பேரம் பேசியதாகவும், ஆனால் தனது கண்ணியமே முக்கியம் எனக் கூறி அதனை மேகாஸ்ரீ நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்தியப் பிரிவு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
