கடலூர் அருகே உள்ள வீ.காட்டுப்பாளையத்தில், இரும்புப் பெட்டி ஒன்றில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு என்பவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், மது குடிக்கப் பணம் தராததால் ஆத்திரமடைந்த பேரன் ராஜப்பிரியன், தனது பாட்டியைச் சொம்பால் அடித்துக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

குடிப் பழக்கத்திற்கு அடிமையான பேரன், தனது பாட்டியையே ஈவு இரக்கமில்லாமல் கொன்றது போலீஸாரையே அதிர வைத்துள்ளது. கொலை செய்த கையோடு தப்பிக்க நினைக்காத பேரன் ராஜப்பிரியன், பாட்டியின் சடலத்தை வீட்டிலிருந்த இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டி மறைத்துள்ளார்.

சுமார் இரண்டு தினங்களுக்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்த நிலையில், துர்நாற்றம் வீசத் தொடங்கிய பிறகே கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. “பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் சொம்பால் தாக்கினேன், அவர் இறந்துவிட்டார்” என்று ராஜப்பிரியன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது ராஜப்பிரியனைக் கைது செய்துள்ள போலீஸார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.