சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மாரமங்கலத்தைச் சேர்ந்த சுமதி (30) என்ற இளம்பெண் திடீரென மாயமான நிலையில், அவரது கணவர் சண்முகத்திற்கு வந்த ஒரு மர்மப் பார்சல் மொத்த வழக்கையும் தலைகீழாக மாற்றியது.

அந்தப் பார்சலில் சுமதியின் தாலி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சுமதியின் கள்ளக்காதலன் வெங்கடேஷ் (22) என்பவர் சிக்கினார்.

சுமதியின் செல்போனுக்கு வந்த ஒரு மர்ம அழைப்பால் ஏற்பட்ட தகராறில், வெங்கடேஷ் அவரைத் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தது அம்பலமானது.

கொலை செய்ததோடு நில்லாமல், சுமதியின் உடலை ஒரு மூட்டையாகக் கட்டி ஏற்காடு – குப்பனூர் சாலையில் உள்ள 600 அடி ஆழப் பள்ளத்தில் வெங்கடேஷ் வீசியுள்ளார்.

தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினரின் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அழுகிய நிலையில் இருந்த சுமதியின் உடல் மீட்கப்பட்டது.

“தனியாக இருந்தபோது சுமதியின் போனுக்கு வந்த அழைப்பால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரத்தைச் செய்தேன்” என வெங்கடேஷ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது வெங்கடேசை கைது செய்துள்ள போலீசார், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா எனத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.