திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தோசை கரண்டியால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆவூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளியான பரதன் என்பவருக்கும், சுந்தரி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான பரதன், தினந்தோறும் போதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மீண்டும் மது குடிப்பதற்காகச் சுந்தரியிடம் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். சுந்தரி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பரதன், அவரைத் தோசை கரண்டியால் சரமாரியாகத் தாக்கியதுடன் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காகக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சுந்தரி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வலங்கைமான் போலீசார், தலைமறைவாக இருந்த பரதனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட இந்தத் தகராறு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.