மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் ஷுஜால்பூரில், ஆட்டோவில் தவறவிட்ட தனது பள்ளிப் பையை மீட்பதற்காக மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. செரி என்ற அந்தச் சிறுமி தனது தந்தையுடன் காவல் நிலையம் சென்று, ஆட்டோவில் தனது பை விடுபட்டுவிட்டதாகவும், அதில் இருக்கும் வீட்டுப் பாடக் குறிப்பேடுகள் இல்லாமல் எப்படிப் படிப்பது என்றும் கண்ணீருடன் முறையிட்டார்.

 

சிறுமியின் கல்வி மீதான ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த காவல் அதிகாரிகள், உடனடியாகத் தனிப்படை அமைத்து நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரைக் கண்டறிந்த காவல்துறையினர், அவரிடமிருந்த பையைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்தப் பை சிறுமியிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அவரது முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.