​”புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இன்னும் 30 நாள்கள் கூட முழுமையாக ஆகவில்லை. கடந்த மே மாதம் 9-ஆம் தேதிதான் முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டார். நாளைதான் ஒரு மாதமே முடிகிறது. வெறும் 29 நாட்கள்தான் ஆகியிருக்கிறது, அதற்குள்ளாகவே அரசாங்கத்தின் மீது 78 கேள்விகளைக் கேட்டுவிடுகிறார்கள். என்னைப்பொறுத்தவரை புதிய அரசுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டியது அவசியம்” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

மேலும், “தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ‘முழு மதுவிலக்கு’ என்பது ஒரு கனவாகவே இருக்கும்; ஆனால், டாஸ்மாக்கை முழுமையாகச் சீரமைக்கும் பணியை இந்த அரசு சிறப்பாகச் செய்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ​தொடர்ந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் புதிய திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், “கடந்த ஆட்சியில் வேலைவாய்ப்புகளே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த அரசு ‘நேர்மையான அரசாங்கம், பெண்களுக்குப் பாதுகாப்பு’ என்ற இரண்டு முக்கிய விஷயங்களை மையப்படுத்திச் செயல்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாளை ‘சிங்கப்பெண் திட்டம்’ தொடங்கப்படவுள்ளது. பல வருஷமாக ஓட்டப்பட்ட ஒரு வண்டியின் இன்ஜின் முற்றிலும் ரிப்பேர் ஆகிப் போய்விட்டது. அப்படிப்பட்ட பழைய இன்ஜினைப் பழுதுபார்த்து, புதுசாகப் பழகிய வண்டியைத் தந்து ‘உடனே நாளைக்கே ஓட்டுப்பா’ என்று சொல்ல முடியாது. இன்ஜின் கோளாறுகளை எல்லாம் சரிசெய்து, வேலையைப் பார்ப்பதற்குக் கொஞ்சம் கால அவகாசத்தை நாம் கொடுத்தே தீர வேண்டும்” என்று வண்டி உதாரணத்துடன் காரசாரமாகப் பேசியுள்ளார்.