பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கனரா வங்கிக் கிளையில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றிய ரகு என்பவர், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனக்குக் குடும்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடும் நெருக்கடிகள் இருப்பதாகக் கூறி, சுமார் இருபத்தியோரு வாடிக்கையாளர்களின் பெயர்களில் அவர் கடன் பெற்றுள்ளார்.
தான் அதே வங்கியில் பணியாற்றுவதால் தனது பெயரில் கடன் பெறுவதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களை நம்ப வைத்த அவர், தன்னிடம் இருக்கும் தங்கத்தை அடமானம் வைத்துப் பணத்தைத் திருப்பிச் செலுத்திவிடுவதாக உறுதி அளித்துள்ளார். இதனை நம்பி வாடிக்கையாளர்கள் அளித்த கையொப்பங்களைப் பயன்படுத்தி, தங்கம் ஏதுமின்றி அவர்களின் பெயர்களில் கடனைப் பெற்று அந்தப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வங்கியின் உள் தணிக்கையின் போது கடன் தவணைகள் சரியாகச் செலுத்தப்படாதது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த மெகா மோசடி அம்பலமானது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மேலாளர் ரகுவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளே இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வங்கி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையில் விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தங்கள் பெயரில் மற்றவர்களுக்குக் கடன் பெற்றுத் தர வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
