தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களை, பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து பார்த்திபன் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த அனுபவம் குறித்தும், அப்போது அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் பார்த்திபன் அந்த வீடியோவில் மிகவும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார். ​அவர்கள் இருவரும் சந்தித்துவிட்டு புகைப்படம் எடுக்க முற்பட்டபோது, முதலமைச்சர் விஜய் அவர்கள் பார்த்திபனிடம், “தோளில் கை போட்டுக் கொள்ளட்டுமா?” என்று மிகவும் பணிவோடு அனுமதி கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன், “நான்தான் உங்களிடம் அனுமதி கேட்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் இப்போது முதலமைச்சர், பழையபடி சகஜமாகத் தோள் மீது கை போட்டுவிட முடியாது. அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் என்னிடம் அனுமதி கேட்கிறீர்களே!” என்று வியந்து போய்க் கூறியுள்ளார். அதன் பிறகு, தோளில் கை போட்டபடி புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் சுமார் 10 நிமிடங்கள் முதலமைச்சருடன் தனியாகப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் பார்த்திபன் அந்த வீடியோவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.