சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், கடந்த ஓராண்டாகச் செயல்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தைப் பராமரிக்க முறையான ஒப்பந்ததாரரை நியமிக்காததால், வடசென்னை பகுதி மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குடிநீர் வரி கட்டினாலும், மக்கள் தினமும் 120 ரூபாய் செலவு செய்து தனியாரிடம் தண்ணீர் வாங்கும் அவல நிலைக்குத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார். தற்போதுள்ள திட்டங்களையே சரியாகப் பராமரிக்கத் தெரியாத ஒரு “திராணியற்ற” அரசாக திமுக விளங்குவதாக விமர்சித்துள்ள அவர், 2026-ல் தான் இந்தத் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“பல்வேறு சாதனைகளைச் செய்துவிட்டதாகக் கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலில் மீஞ்சூர் குடிநீர்த் திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனையைத் தீர்க்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-இன் பிரதான கோரிக்கையாக உள்ளது.
