அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக முன்னாள் எம்.எல்.ஏ செங்கோட்டையன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது அந்த நகர்வுகள் வேகமெடுத்துள்ளன. நேற்று முன்னாள் எம்.எல்.ஏ சி.கிருஷ்ணன் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, இன்று மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ-வான மரியமுல் ஆசியா, செங்கோட்டையன் முன்னிலையில் தன்னைத் தவெக-வில் இணைத்துக் கொண்டார். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் இப்படி அடுத்தடுத்து விலகுவது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இணைப்பு விழா குறித்துப் பேசிய செங்கோட்டையன், இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறியுள்ளார். “பொங்கலுக்கு முன்பாக இன்னும் பல அதிமுக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வார்கள்” என்று அவர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு, அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது வரும் 2026 தேர்தலுக்கான புதிய அரசியல் மாற்றத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
