பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் கத்ரா காவல் எல்லைக்குட்பட்ட பந்துபுரா ஊராட்சியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு உதவி ஆய்வாளரை ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கும் உரிமை தொடர்பாகப் பழைய ஒப்பந்ததாரரான ஊராட்சித் தலைவர் பஹத் ஆசாம் என்பவருக்கும் புதிய ஒப்பந்ததாரரான தபேந்தர் சிங் என்பவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி வந்தது.

 

இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புடன் மீன் பிடிக்கும் பணி நடைபெற்ற போது ஊராட்சித் தலைவரும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து தாக்குதல் நடத்தினர். இதில் உதவி ஆய்வாளர் ஸ்ரீகாந்த் சிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தப்பியோடிய ஊராட்சித் தலைவரைத் தேடி வரும் காவல்துறையினர் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் எவரையும் விடப்போவதில்லை என்றும் எச்சரித்துள்ளனர்.