மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் மகனைப் பொய் வழக்கில் சிக்க வைத்து, 10 கோடி ரூபாய் மிரட்டிப் பறிக்க முயன்ற இரண்டு பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோரேகான் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் கோயல் என்பவரது மகன் ரிதம், கடந்த நவம்பர் 14-ம் தேதி ஒரு விடுதியில் நடந்த விருந்து முடிந்து லிஃப்டில் சென்றபோது, அங்கு வந்த ஒரு பெண் ரிதம் தன் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சியதாகக் கூறி தகராறு செய்துள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பெண் ரிதம் மீது பாலியல் சீண்டல் புகாரைப் பதிவு செய்த நிலையில், இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர ஹேமலதா பட்கர் மற்றும் அம்ரினா ஜாவேரி ஆகிய இரு பெண்கள் 10 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளனர். தொழிலதிபர் குடும்பத்தை மிரட்டி, இறுதியில் 5.5 கோடி ரூபாய்க்குப் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக 1.5 கோடி ரூபாயை லோயர் பரேல் பகுதியில் வைத்து வாங்க முயன்றபோது, மும்பை குற்றப்பிரிவு போலீசார் விரித்த வலையில் அந்தப் பெண்கள் கையும் களவுமாக சிக்கினர்.

தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் போலி ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தைத் தீட்டி அவர்களைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உட்கர்ஷ் என்ற மற்றொரு நபர் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.