ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், திருமணமான மற்றும் இளம் பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஜாட் சமூக பஞ்சாயத்து தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசிப்பூரில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, வரும் ஜனவரி 26 முதல் பெண்கள் பொது நிகழ்வுகள், திருமணங்கள் அல்லது அண்டை வீடுகளுக்குச் செல்லும்போது கேமரா வசதி கொண்ட செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக நேரம் போன் பயன்படுத்துவதைக் குறைக்கவும், குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாயத்து நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் படிப்புக்காக மட்டும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிப்பூர், பவாளி, கான்பூர் உள்ளிட்ட 15 கிராமங்களில் அமல்படுத்தப்பட உள்ள இந்த அதிரடி கட்டுப்பாடு, அந்தப் பகுதி பெண்களிடையே அதிர்ச்சியையும், சமூக வலைத்தளங்களில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
