கருத்தடைக்கு எதிராக நடத்தப்பட்ட கிறிஸ்தவ மத ஊர்வலம் ஒன்றில் தமிழகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 1971-ம் ஆண்டிலேயே கருத்தடை சட்டம் சட்டபூர்வமாக்கப்பட்ட நிலையில், அத்தகைய சட்டத்திற்கு எதிராகப் பெண்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையிலும், ‘கருத்தடை என்பது கொலைக்குச் சமம்’ என்பது போன்ற கோஷங்கள் அந்த ஊர்வலத்தில் எழுப்பப்பட்டுள்ளது மிகுந்த விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து பாஜகவின் தலைமைச் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், சபாநாயகர் பதவியில் இருப்பவர் தொடர்ந்து இதுபோன்ற கிறிஸ்தவ மத நிகழ்வுகளில் பங்கேற்பதும், சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைப்பதும் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, சபாநாயகராக இருப்பவர் தனது தனிப்பட்ட மத நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், அதனை மக்கள் மத்தியில் வெளிப்படையாகத் திணிக்கும் விதமாகச் செயல்படுவது முறையல்ல என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதேபோன்று இந்து மத நம்பிக்கைகள் சார்ந்து யாரேனும் செயல்பட்டிருந்தால் எதிர்கட்சிகள் உடனடியாகக் குரல் எழுப்பியிருக்கும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டே அரசியல் கட்சிகள் இதுபோன்று நடப்பதாகவும், இதுவே போலி மதச்சார்பின்மைக்குச் சிறந்த உதாரணம் என்றும் சாடியுள்ளார். சபாநாயகர் கலந்துகொண்ட இந்த ஊர்வல விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
