அம்ரோஹாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி அகானா, துரித உணவுகள் (Junk Food) மீது கொண்ட அதீத மோகத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஜங்க் ஃபுட் சாப்பிட்டதால் அகானாவின் உடல் எடை 70 கிலோவாக உயர்ந்ததுடன், அவரது குடலிலும் கடுமையான தொற்று ஏற்பட்டது. இதற்காக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
பீட்சா, பர்கர், மோமோஸ் போன்ற உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததும், அவற்றில் சேர்க்கப்படும் தரம் குறைந்த எண்ணெயும் இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் பெருகி வரும் துரித உணவு கடைகள், மாணவர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
இந்த உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு மற்றும் கொழுப்பு சத்துக்கள் இதயம் மற்றும் கல்லீரலைப் பாதிப்பதுடன், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கின்றன. பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருந்து குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என்றும், வாரத்திற்கு ஒருமுறைக்கு மேல் இத்தகைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
