மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களை ஏமாற்றி ரூ.1.5 கோடி வரை மோசடி செய்த கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திலேஷ்வர் படேல் என்பவர் தலைமையில் இயங்கிய இந்த கும்பல், போலியான மேட்ரிமோனி இணையதளங்களை உருவாக்கி, அதில் அழகான பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றி ஆண்களைக் கவர்ந்துள்ளனர். இந்த மையங்களில் வேலை பார்த்த 20 இளம்பெண்கள், மணப்பெண்கள் போல நடித்து ஆண்களிடம் பேசி, பதிவு கட்டணம் மற்றும் இதர செலவுகள் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி ஆன்லைன் மூலம் பணம் பறித்து வந்துள்ளனர்.
சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஆண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடியில், பிடிபடாமல் இருப்பதற்காக அந்தப் பெண்கள் சாதாரண கீபேட் மொபைல்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், குவாலியர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 20 பெண்கள் மற்றும் மையத்தை நடத்திய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான திலேஷ்வரை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
