சினிமா பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் திருட்டுச் சம்பவங்கள் எப்போதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான லோபமுத்ரா ராவத்தின் மும்பை வீட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட கொள்ளைச் சம்பவம் தற்போது திரைத்துறையிலும் பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சாந்தாக்ரூஸ் பகுதியில் அமைந்துள்ள இவரது பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம், தங்கக் கட்டிகள் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
நடிகை வெளியூர் சென்று திரும்பியபோது தான் வீட்டில் கதவு பூட்டப்பட்டிருப்பதையும், பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட மும்பை சாந்தாக்ரூஸ் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும், செல்போன் சிக்னல்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியைக் கொண்டும் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியை மேற்கொண்டனர். விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான சந்தன் முகியா என்ற வாலிபர் தான் இந்தத் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
நடிகை வீட்டைக் பூட்டிவிட்டுச் சென்றதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், பல நாட்கள் அப்பகுதியை நோட்டமிட்டு, காற்றோட்டப் பாதை வழியாக வீட்டிற்குள் புகுந்து மிகச் லாவகமாகக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.
குற்றவாளியைக் கைது செய்யத் தனிப்படை அமைத்த மும்பை போலீசார், பீகார் மாநில காவல் துறையின் உதவியோடு தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்துச் சந்தன் முகியாவை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 75 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான தங்கக் கட்டிகள், ஆடம்பரக் கைக்கடிகாரம் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தன் குடும்பத்தின் பெயரில் நிலம் வாங்க அவர் முயன்ற அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் வெளிவந்துள்ளது. விரைவாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த காவல் துறையினரின் இந்தச் சிறப்பான நடவடிக்கையை நடிகை லோபமுத்ரா ராவத் மற்றும் பொதுமக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
