பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில், பெண் தொழில்முனைவோருக்காக வழங்கப்பட வேண்டிய அரசு நிதியுதவி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆண்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்’ கீழ், பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய தலா ₹10,000 ஊக்கத்தொகை, ஜாலே பகுதியைச் சேர்ந்த சில ஆண்களுக்குத் தவறுதலாகச் சென்றுள்ளது.
தற்போது அந்தப் பணத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு ‘ஜீவிகா’ அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், “தேர்தலில் நாங்கள் உங்களுக்குப் போட்ட வாக்குகளை முதலில் திருப்பித் தாருங்கள், பிறகு பணத்தைத் தருகிறோம்” என கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஆவேசமாகத் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலுக்காகவே இந்தப் பணம் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், தீபாவளி மற்றும் சத் பூஜையின் போது அந்தப் பணத்தைச் செலவு செய்துவிட்டதாகவும், தற்போது அதைத் திருப்பித் தர இயலாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
நிலமற்ற ஏழைத் தொழிலாளர்களான தாங்கள் இப்போது பணத்திற்கு எங்கே போவோம் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும், இதுவரை 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதில் 7 பேர் பணத்தைத் திரும்பச் செலுத்திவிட்டதாகவும், மீதமுள்ள பணத்தை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தர்பங்கா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
