மத்தியப் பிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளுக்கு ரத்த தானம் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்னா மற்றும் ஜபல்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ரத்தம் ஏற்றப்பட்ட 12 முதல் 15 வயதுடைய இந்தக் குழந்தைகளுக்கு, வழக்கமான பரிசோதனையின் போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் ஒரு குழந்தையின் பெற்றோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசுத்தமான ரத்தம் ஏற்றப்பட்டதே இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்தியப் பிரதேச அரசு டாக்டர் சத்யா அவதியா தலைமையில் ஆறு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருந்து ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி வேறு எங்கு ரத்தம் ஏற்றப்பட்டது என்பது குறித்தும், இந்தத் தவறு எங்கு நடந்தது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
