பெங்களூருவைச் சேர்ந்த 67 வயது ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர், தனது 70 வயது கணவர் மீது 42 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமைகள் குறித்து பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், தனது கணவர் தன்னை நீண்டகாலமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
1993-ல் வேலையை இழந்த கணவர், மனைவியின் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பணத்தில் வாழ்ந்து கொண்டே, அவரது பி.எச்.டி படிப்பு மற்றும் பணி உயர்வை இழிவுபடுத்தி வந்துள்ளார். மேலும், மனைவியின் சொத்துக்களையும் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில், வீட்டை சுத்தம் செய்யும் போது கணவர் தன்னைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், இதைத் தடுத்த போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சொத்துக்கள் அனைத்தும் தன் பெயரில் இருப்பதால், மனைவியையும் இரண்டு மகன்களையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கணவர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்தே, அந்தப் பெண் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
