சென்னையை அடுத்த மேற்கு முகப்பேர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்பவர், அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காகச் சென்றிருந்த நிலையில், ரோஷன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இன்று அதிகாலை குடும்பத்தினர் அனைவரும் வீடு திரும்பியபோது, மகன் நீண்ட நேரமாக கதவைத் திறக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறி கூச்சலிட்டனர். உடனடியாக நொளம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் ரோஷனின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, ரோஷன் தற்கொலை செய்துகொண்ட அறையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, ஒரு கடிதம் சிக்கியது. அதில், “தன்னுடைய காதுக்குள் யாரோ அழைப்பது போல ஒரு மர்ம ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது” என்றும், அத்துடன் ஒரு சண்டை தொடர்பாக தனது பெற்றோர் மற்றும் சகோதரரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் எழுதியிருந்தார்.
ஐடி ஊழியரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறியும் பொருட்டு, காவல்துறையினர் தற்போது அவரது செல்போனைக் கைப்பற்றி, மர்ம ஒலி குறித்த தகவல்கள் ஏதேனும் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
