ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கொருவா அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒழுங்கீனமாகவும், முறையாகப் பள்ளிக்கு வராமலும் இருந்த 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் கண்டித்தபோது, அப்பள்ளியில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவரின் தொடர் ஒழுங்கீனம் குறித்து தலைமை ஆசிரியர் பேசியபோது, ஆத்திரமடைந்த அந்த 14 வயது மாணவன், தான் பையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஆசிரியரின் முகத்துக்கு நேராக நீட்டி, “சுட்டுவிடுவேன்” என மிரட்டியுள்ளான். இதனால் தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, அது உண்மையானதா அல்லது போலியானதா என தடயவியல் சோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்தத் துப்பாக்கி அவனுக்கு எங்கிருந்து கிடைத்தது மற்றும் இதன் பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகத்தில் மாணவன் துப்பாக்கியுடன் வந்து மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
