சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் 30 வயது பெண். ஓமியோபதி மருத்துவரான இவர், தேனாம்பேட்டையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கணவரின் அலுவலகம் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ளது. கணவரை சந்திப்பதற்காக வசந்தி டி.டி.கே. சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு நபர், அனுமதியின்றி செல்போனில் வீடியோ படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதை வசந்தி கண்டித்தும், அந்த நபர் தொடர்ந்து வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து வசந்தி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெற்குன்றத்தை சேர்ந்த விஜயகுமார் (47) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விஜயகுமாரை போலீசார் கைது செய்ததுடன், வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
