ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மதன்குமார் என்பவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மதன்குமார் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடப்பதாகக் கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 11ஆம் தேதி அவர் உயிரிழந்தார். முதலில் இது தற்கொலை என்று சுஜித்ரா கூறியதால், போலிசார் மர்மச் சாவாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

​ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் மதன்குமார் விஷம் குடிக்கவில்லை என்றும், தலையில் அடிபட்டுதான் இறந்தார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து போலிசார் சுஜித்ராவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடந்த 5ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த மதன்குமாருக்கும், பெற்றோர் வீட்டுக்குச் செல்ல விரும்பிய சுஜித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டையின்போது மதன்குமார் சுஜித்ராவின் கழுத்தைப் பிடித்துள்ளார். அதிலிருந்து தப்பிக்க சுஜித்ரா அவரைத் தள்ளிவிட்டதில், மதன்குமாரின் தலை தரையில் மோதி காயம் அடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. கணவரைக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய குற்றச்சாட்டில் போலிசார் சுஜித்ராவைக் கைது செய்தனர்.