விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள களத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (24). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இருவரும் தொடர்ந்து செல்போனில் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வரவழைத்த முனியாண்டி, ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்திச் சென்று திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது. சிறுமி மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிறுமியை மீட்டனர்.
மேலும், சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக முனியாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
