தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வீசும் டொர்னடோ (Tornado) எனப்படும் ராட்சத சுழல் காற்று திடீரென வீசி கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென வானத்தில் கியூமுலோனிம்பஸ் மேகங்கள் சூழ்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு பெரிய புனல் வடிவத்தில் ராட்சத தூசுச் சூறாவளி உருவானது. இந்த அரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் இயற்கை நிகழ்வை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் தங்களது செல்போன்களில் வீடியோ எடுக்க, தற்போது அந்த பயங்கர காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகின்றன.
இந்த பயங்கர சூறாவளி காற்றின் வேகத்திற்குத் தாளாமல், தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் சுங்கச்சாவடியின் (Toll Plaza) ராட்சத மேற்கூரைகள் அனைத்தும் மொத்தமாகப் பெயர்ந்து காற்றில் தூக்கி வீசப்பட்டு சுக்குநூறாகச் சேதமடைந்தன.
Tornado near Thoothukudi Airport🍃💨@praddy06 @ChennaiRains @TenkasiWeather @ramanathan4548 pic.twitter.com/yBxdI7XyXk
— Pearlcity Weather (@TutyRains) June 21, 2026
அதிர்ஷ்டவசமாக அங்கு நின்றிருந்த வாகனங்கள் தப்பினாலும், அருகில் இருந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தீவிர வெப்பச்சலனம் காரணமாக மிகக் குறுகிய பரப்பளவில் ஏற்படும் தற்காலிக தூசுச் சூறாவளி (Dust Devil) இது என்றும், தமிழகத்தில் இது போன்ற நிகழ்வு மிகவும் அரிதானது என்றும் தெரிவித்துள்ளது.
