உத்திரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள ‘பிஎல் வித்யா மந்திர்’ என்ற தனியார் விடுதிப் பள்ளியில், மோமோஸ் சாப்பிட்ட பல மாணவர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத சம்பவத்தில் படித்து வந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

​நகரக் காவல் எல்லைக்குட்பட்ட இந்த விடுதிப் பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவர்கள், இரவு நேரத்தில் மோமோஸ் சாப்பிட்ட பிறகு கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளனர். மாணவர்களின் நிலைமை மோசமடைந்ததை அடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அவர்களை மாவட்ட அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே 12 வயதான நிதின் என்ற மாணவன் உயிரிழந்தான்.

​மேலும், 8 வயதான அருண் என்ற மற்றொரு சிறுவன் தீவிர சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் தற்போது மாவட்ட மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை அறிந்த பெற்றோர் கதறித் துடித்தபடி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

​இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஏஎஸ்பி சிவராஜ் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட பிஎல் வித்யா மந்திர் பள்ளிக்கு வகுப்புகள் நடத்த மட்டுமே அனுமதி உள்ளதாகவும், சட்டவிரோதமாக விடுதி (Hostel) நடத்தி வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் கடுமையான அலட்சியமே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டி வரும் நிலையில், காவல்துறையினர் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.