கர்நாடக மாநில வனத்துறையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துத் தமிழக அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்துள்ள பேட்டி மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது.

​செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “ஒரு மாநிலத்தின் உள்நாட்டு நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளில் நான் போய் தலையிட முடியாது அல்லவா? அதேபோலத் தான் எங்களுடைய மாநிலத்தைச் சட்டப்படி எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் (தமிழ்நாடு அரசு) தங்களுடைய வேலையைச் செய்யட்டும், நாங்கள் எங்களது வேலையைச் செய்கிறோம்” என்று கூறி, தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு தலையிடுவதைக் கர்நாடகா விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

​3 தமிழர்கள் அண்டை மாநில வனத்துறையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பொறுப்பற்ற முறையில் இப்படிப் பேசியிருப்பது தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் இரு மாநில எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.