சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே அண்ணிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனாரை, ஆத்திரமடைந்த பெண்ணின் தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி போயர் தெருவைச் சேர்ந்த சின்னதிருப்பதி (39) என்ற கூலித்தொழிலாளி, தனது அண்ணன் மனைவியான செல்வி என்பவரிடம் அடிக்கடி பணம் கேட்டும், பாலியல் ரீதியாகவும் அத்துமீறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து செல்வி தனது தம்பியான சபரி என்கிற மணிகண்டனிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி, நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் அக்கா வீட்டிற்கு வந்து தகராறு செய்த சின்னதிருப்பதியைத் தடுத்துக் கண்டித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சபரி தனது அக்காவிற்குத் தொல்லை கொடுத்த சின்னதிருப்பதியை இழுத்துச் சென்று அங்கிருந்த கோயில் சுவரில் தலையை மோதி சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சின்னதிருப்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த ஜலகண்டாபுரம் காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த தம்பி சபரியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.