சென்னை வளசரவாக்கம் பகுதியில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் வீட்டில் உல்லாசமாக இருந்ததை வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி சிசிடிவி கேமரா மூலம் நேரடியாகக் கண்காணித்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்த அபிநயா (29), துபாயில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். இவருக்கும், சென்னை மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் அருள் பிரசாத் (34) என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அபிநயா, அவர் அறியாமல் வீட்டிற்குள் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, அதன் இணைப்பைத் தனது செல்போனுடன் இணைத்திருந்தார்.
சில தினங்களுக்கு முன் ரகசியமாக சென்னை திரும்பிய அபிநயா, ஹோட்டல் ஒன்றில் தங்கி கேமரா காட்சிகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கணவர் வேறொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததை உறுதி செய்த அபிநயா, உடனடியாக வீட்டிற்குச் சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தார். அப்போது அருள் பிரசாத் அங்கிருந்து தப்பி ஓடிவிட, அவருடன் இருந்த பெண்ணுக்கும் அபிநயாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அபிநயா கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
